மானாமதுரை அருகே, வைகை ஆற்றுக்குள் பாதை அமைத்து லாரிகளில் மணல் திருட்டு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் பாதை அமைத்து லாரிகளில் மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்று பகுதியில் சமீபகாலமாக மணல் திருட்டு சம்பவம் மீண்டும் தலைதூக்கி வருகிறது. இதற்கு முன்பு இருந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இந்த மணல் திருடும் கும்பலை கையும், களவுமாக பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றதால் இந்த பணிகளுக்காக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்பின்னர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் மணல் திருட்டு சம்பவம் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை வைகையாற்று பகுதியில் இந்த மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதிலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்திலே மணல் திருட்டால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடம் என்றால் அது மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதி மட்டுமே. இங்கு எடுக்கப்படும் மணலுக்கு உள்ளூரிலேயே நல்ல விலை கிடைப்பதால், அதிக அளவில் மணல் திருட்டு நடக்கிறது. கடந்த சில மாதங்களாக மாட்டுவண்டியில் மணல் அள்ளப்பட்டு வந்தது.
தற்போது அனுமதியின்றி ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் லாரிகள் மூலம் மணல் திருட்டு நடந்து வருவதால் மணல் அள்ளிய இடங்கள் பெரிய பள்ளங்களாக மாறி பதுங்கு குழிகளாக காட்சி தருகின்றன.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்திலேயே கடந்த சில ஆண்டு களாக மானாமதுரை வைகையாற்று பகுதியில் தான் அதிக அளவில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் மணல் லாரிகள் உள்ளே செல்லும் வகையில் புதிதாக பாதை அமைக்கப்பட்டு அந்த பாதை வழியாக இரவு நேரங்களில் ஏராளமான லாரிகள் உள்ளே சென்று விடிய, விடிய மணல் அள்ளி வருகின்றன. பாதை அமைத்து லாரிகள் மூலம் மணல் அள்ளி வருவது வருவாய்த்துறைக்கும், போலீசாருக்கும் தெரியாமல் இருக்காது. ஆனால் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என தெரியவில்லை.
தொடர்ந்து மணல் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் இந்த பகுதியில் கடுமையான குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் லாரிகள் உள்ளே வராத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட வேண்டும்.
இதுதவிர தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் இந்த மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story