தென்னை விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


தென்னை விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 15 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை, 

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பயறு வகைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் சென்றபோது விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் பயறு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, கொப்பரை தேங்காய்களின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் பொருட்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கீட்டை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 450 மெட்ரிக் டன் அரவை கொப்பரை தேங்காய் மற்றும் 50 மெட்ரிக் டன் பந்து கொப்பரை தேங்காய் என மொத்தம் 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் விலை அரவைக் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.95.21 எனவும், பந்து கொப்பரை தேங்காய்க்கு ரூ.99.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளால் வழங்க வேண்டிய கொப்பரைதேங்காயின் தரம் அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. மேலும் இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை தேங்காய், சுருக்கம் கொண்ட கொப்பரை தேங்காய் அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம். இதன் ஈரப்பதம் அதிகபட்சம் 7 சதவீதம் வரை இருக்கலாம். அதன் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மில்லி மீட்டர் இருக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து தங்களது கொப்பரைதேங்காயினை ஒப்படைக்கலாம். மேலும் அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்து எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த கொள்முதல் பணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story