நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நகை பறிக்க முயன்ற 4 பேர் சிக்கினர்


நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது நகை பறிக்க முயன்ற 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 14 July 2019 9:30 PM GMT (Updated: 14 July 2019 6:43 PM GMT)

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் போது நகை பறிக்க முயன்றதாக 4 பேர் சிக்கினர்.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் போது நகை பறிக்க முயன்றதாக 4 பேர் சிக்கினர்.

தேரோட்டம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இந்த தேரோட்டத்தில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக 4 ரதவீதிகளில் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகின்ற காட்சிகளை கட்டுபாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து கொண்டே இருந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியில் நிற்கின்ற போலீசாருக்கு தகவல் கொடுத்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட முயற்சி செய்கிறவர்களை பிடிக்க உத்தரவிட்டுக்கொண்டு இருந்தனர்.

4 பேர் சிக்கினர்

இந்த நிலையில் சுவாமி தேர் கீழரதவீதியில் நின்ற போது டிப்-டாப்பாக உடை அணிந்த 3 பெண்களும், ஒரு வாலிபரும் சேர்ந்து அதிக அளவில் நகை அணிந்து சென்ற பெண்களின் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றனர். இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார், தேர் அருகில் நின்ற போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நகை பறிக்க முயன்ற 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த பெண்கள் ஏற்கனவே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story