நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய அளவிலான பசுமை மாரத்தான் ஓட்டம்


நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய அளவிலான பசுமை மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 15 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தேசிய அளவில் லால்குடியில் பசுமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியில் விவசாயம் மற்றும் நீர்நிலைகள், வருங்கால தலைமுறையினரை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை பூவை இளைஞர்கள், லால்குடி இயற்கை விழுதுகள், கோட்ட தகவல், தமிழ் தேசிய அக்னி சிறகுகள் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து தேசிய அளவில் நேற்று பசுமை மாரத்தான் போட்டியை நடத்தின. போட்டியை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பாலாஜி, ஒலிம்பிக் தடகள வீரர் மற்றும் ஆசிய தடகள சாம்பியன் ஆரோக்கியராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டிகள் 10 கி.மீ, 5 கி.மீ. என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் பூவாளூர், பின்னவாசல், அகலங்கநல்லுார், தாரானூர், திருமங்கலம் வழியாக திருச்சி சாலையை அடைந்து, பின்னர் அங்கிருந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் முதலிடத்தையும், கென்யாவை சேர்ந்த பீட்டர் 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த பாலசந்தர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த ஆஷா முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா 2-ம் இடத்தையும், பெரம்பலூரை சேர்ந்த தன்யா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பரிசு

அதேபோல பள்ளியில் இருந்து தொடங்கிய 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் லால்குடி பிரதான சாலை வழியாக பூவாளூர் பைபாஸ் சாலை வரை சென்று, பின்னர் அங்கிருந்து பள்ளியில் நிறைவடைந்தது. இதில் திருச்சியை சேர்ந்த மதுபாலன் முதலிடத்தையும், வேல்முருகன் 2-ம் இடத்தையும், பிரகாஷ் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

திருச்சி மாநகர இணை போலீஸ் கமிஷனர் மயில்வாகனன், லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்ட உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர் சித்ரா, லால்குடி வக்கீல் சங்க தலைவர் கென்னடி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பழனிசாமி, செயலாளர் அபிராமி ஸ்ரீதர், தமிழ் தேசிய அக்னி சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் உள்பட ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர். 

Next Story