கயத்தாறு வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழா 2 அமைச்சர்கள் பங்கேற்பு
கயத்தாறு அருகே வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழாவில் 2 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி,
கயத்தாறு அருகே வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழாவில் 2 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கிளை திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வானரமுட்டியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை மற்றும் அம்மா சிறு சில்லறை விற்பனை அங்காடி திறப்பு விழா நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வானரமுட்டி கிளை, வானரமுட்டி அம்மா சிறு சில்லறை விற்பனை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தனர். பின்னர் ரூ.16 லட்சம் செலவில் புதுபிக்கப்பட்ட பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தனர்.
நலத்திட்ட உதவிகள்
மேலும் கோவில்பட்டி பகுதி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 794 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 93 லட்சம் மதிப்பிற்கு கடன் திட்ட உதவிகள், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங் சேவை, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் லேப்டாப், மேசை, நாற்காலி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் 114 மாணவ- மாணவிகள், கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 294 மாணவர்கள், கழுகுமலை கம்மவார் மேல்நிலைப்பள்ளியின் 170 மாணவர்கள், நாலாட்டின்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 228 மாணவர்களுக்கு ரூ.98.92 லட்சம் மதிப்பில் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன.
யார்-யார்?
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இந்துமதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார்கள் பரமசிவம், லிங்கராஜ், வானரமுட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story