காமராஜர் மணிமண்டபம் திறப்பு, “12 ஆண்டு கால கனவு நிறைவேறியது” - விருதுநகரில் சரத்குமார் பேட்டி


காமராஜர் மணிமண்டபம் திறப்பு, “12 ஆண்டு கால கனவு நிறைவேறியது” - விருதுநகரில் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 July 2019 4:45 AM IST (Updated: 15 July 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்படுவதன் மூலம் தனது 12 ஆண்டு கால கனவு நிறைவேறியதாக சரத்குமார் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் கலந்து கொள்கிறார்.

விருதுநகரில் மணிமண்டப வளாகத்தில் நடைபெறும் விழாவில் சரத்குமார், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர். உண்மை, நேர்மை, எளிமை என்ற அடிப்படையில் சிறந்த ஒரு மனிதராகவும், பாரத தலைவராகவும் திகழ்ந்தவர். அவருக்காக மணிமண்டபம் அமைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதன் மூலம் எனது 12 ஆண்டு கால கனவு நிறைவேறியது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இது வெறும் மணிமண்டபமாக மட்டும் இருக்காது. நல்ல கல்வி நிலையமாகவும், அறிவியல் பூங்காவாகவும் திகழும். இங்குள்ள மைய மண்டபமானது தூண்களே இல்லாமல் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மிகவும் பாதுகாப்புடன் கட்டப்பட உள்ளது. இந்த மைய மண்டப பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும்.

மைய மண்டபத்தின் அருகில் திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. மேலும் இங்கு பள்ளிக்கூடமும் கட்ட உள்ளோம். பல நூறு ஆண்டுகள் திறம்பட இந்த பள்ளி செயல்பட வேண்டும். இதற்காகவும், மணிமண்டபத்தை பராமரிக்க ஆகும் செலவுக்காகவும் வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உணவகம் கொண்டு வர உள்ளோம். பெட்ரோல் விற்பனை நிலையமும் திறக்கப்படலாம். அடுத்த ஆண்டுக்குள் இந்தப்பணிகள் நிறைவு பெறும். இதற்காக அரசிடம் எந்த நிதியும் கேட்கவில்லை.

நெடுஞ்சாலையில் இந்த மணிமண்டபம் உள்ளதால், பயணிகளும் ஓய்வு எடுத்து செல்லலாம். இந்த இடம் 2 ஆயிரம் பேர் அமர்ந்து இருக்கும் அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. நான் நினைத்திருந்தால் 500-க்கு 500 அடி அளவில் ஒரு வருடத்தில் மணிமண்டபத்தை கட்டி முடித்திருப்பேன். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமின்றி தண்டி யாத்திரை மேற்கொண்ட காந்தி மற்றும் நாட்டுக்காக உழைத்த தலைவர்கள், முதல்-அமைச்சர்கள் ஆகியோரின் பெருமைகளையும், புகழையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் மைய மண்டபம் அமைக்கப்பட உள்ளது. காமராஜர் சிலை 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

வெறும் மணிமண்டபமாக மட்டும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மாணவர்கள், பொது மக்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம். இதனால் தான் 12 ஆண்டு கனவை குறிஞ்சி மலரை போல செதுக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் துணை பொது செயலாளர்கள், ஞானசேகரன், ஈஸ்வரன், தொழிலதிபர் ஹரிநாடார் உள்பட பலர் இருந்தனர்.

Next Story