முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் எடியூரப்பா பரபரப்பு பேட்டி
முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (திங்கட்கிழமை) நடத்த வேண்டும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (திங்கட்கிழமை) நடத்த வேண்டும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா ஆலோசனை
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று குமாரசாமி அறிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க கூட்டணி தலைவர்கள் முயற்சிப்பதாக பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதையடுத்து, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு எலகங்கா அருகே உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மாநில தலைவர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, எடியூரப்பா நிருபர் களுக்கு அளித்த பேட்டி யின் போது கூறிய தாவது:-
இன்றே நடத்த வேண்டும்
கூட்டணி ஆட்சியில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதுடன், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றுள்ளனர். கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யாவிட்டால் நாளை (இன்று 15-ந் தேதி) நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. குமாரசாமி தான் கூறினார்.
எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கும் பட்சத்தில் நாளையே(அதாவது இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும். விதானசவுதாவில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே(அதாவது இன்று) நடத்த வேண்டும் என்று பா.ஜனதா சார்பில் மனு கொடுக்கப்படும்.
பின் வாங்க மாட்டார்கள்
இந்த கூட்டணி அரசு எக்காரணத்தை கொண்டும் நீடிக்கப் போவதில்லை என்று அனைவருக்கும் தெரியும். ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவது சாத்தியமில்லை. அரசு மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி மீதான அதிருப்தியால் எம்.எல்.ஏ.க்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். அப்படி இருந்தும் எம்.எல்.ஏ.க்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த கூட்டணி தலைவர்கள் சதி செய்கிறார்கள்.
சட்டசபை கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்பது குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி எடுக்கும் முடிவை பொறுத்து பா.ஜனதா கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story