கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2019 3:45 AM IST (Updated: 15 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சிவானந்தா காலனியில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்பதோடு மட்டுமல்லாமல் கோவில் நிலத்தை இதுநாள் வரை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான 4 லட்சத்து 22 ஆயிரத்து 961 ஏக்கர் நன்செய், புன்செய் நிலம் மற்றும் மானாவாரி நிலங்களிலும் மற்றும் கடை வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அப்படியிருந்தும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வாங்குவது ஏன்?. அதை ரத்து செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே அந்த துறையை கலைத்து விட்டு கோவில்களை பராமரிக்க தனி சுதந்திரமாக செயல்படும் வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கிஷோர்குமார், நிர்வாக குழு உறுப்பினர் குணா, செந்தில்குமார், மாநில அமைப்பாளர் பத்தன், கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செய்தித்தொடர்பாளர் சி.தனபால், மாவட்ட செயலாளர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கோவை துடியலூர் பஸ் நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்து கோவில்களில் கட்டணம் வாங்கி கொண்டு சாமி தரிசனம் செய்ய இருப்பதை இந்து அறநிலையத்துறையினர் ரத்து செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணன், முத்துக்குமார், தம்பி சரவணன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி மாநகராட்சி பிரிவு அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கி பேசினார். இதில் 350-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story