வாக்குச்சாவடிகளில் நேர்மையாக பணியாற்ற வேண்டும் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு


வாக்குச்சாவடிகளில் நேர்மையாக பணியாற்ற வேண்டும் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 14 July 2019 10:52 PM GMT (Updated: 14 July 2019 10:52 PM GMT)

தேர்தல் பணியாற்ற இருப்பவர்கள், வாக்குச்சாவடிகளில் நேர்மையாக பணியாற்றவேண்டும் என்று முதல் கட்ட பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. 7 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியது. வேலூர் தொகுதியில் பணியாற்ற இருக்கும் ஆசிரியர்களுக்கு வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியிலும், கே.வி.குப்பம் தொகுதிக்கு கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், குடியாத்தம் தொகுதிக்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு தொகுதிக்கு திருமலைக்கோடி ஸ்பார்க் மேல்நிலைப்பள்ளியிலும், ஆம்பூர் தொகுதிக்கு அங்குள்ள இந்து மேல்நிலைப்பள்ளியிலும், வாணியம்பாடி தொகுதிக்கு இஸ்லாமியா கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூரில் நடந்த பயிற்சி வகுப்பில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் பயிற்சியை தொடங்கிவைத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு செய்வது குறித்து விளக்கி பேசினார். அவர் பேசியதாவது:-

தேர்தல் அறிவித்த நாளில் இருந்து அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பணிபுரிபவர்கள் சிறப்பாக பணியாற்றினால் தான் அனைத்து ஊழியர்களின் உழைப்பும் உறுதி செய்யப்படும். ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் நம்பிக்கையுடன் வருவார்கள். அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் நேர்மையாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டும்.

சிறிய தவறு நடந்தால் கூட மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே மிகவும் கவனமாக வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவை சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதில் வாக்குப்பதிவின்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து எந்தவகையிலும் வாக்குப்பதிவு பாதிக்காத வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story