ஜோலார்பேட்டை அருகே 2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது


ஜோலார்பேட்டை அருகே  2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2019 4:30 AM IST (Updated: 15 July 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி 2 சிறுவர்களை கழுத்து நெரித்து கொன்று விட்டு ரெயிலில் அடிபட்டதுபோல் நாடகமாடி தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் முத்ராயன் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 17). இவர் கடந்த 12.6.19 அன்று பச்சூர் - சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கருதப்பட்டது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆனந்தன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆனந்தனின் தந்தை குமார் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், ஏட்டுகள் சுப்பிரமணி, சியாமளா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் தனிப்படையினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களில் ஒருவர் நாட்டறம்பள்ளி சாமகவுண்டர் தெருவை சேர்ந்த பாபு என்பவரின் மகன் கார்த்தி (22) என்பதும் மற்றொருவர் சின்னசாமி தெருவை சேர்ந்த நந்தகுமார் மகன் பாலாஜி (33) என்பதும் தெரியவந்தது இவர்களில் கார்த்தி, டி.வீரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் கிளனராக வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்தி ஓரின சேர்க்கையில் ஆர்வம் கொண்டவர், சிறுவர்களை கட்டாயப்படுத்தி கடத்தி வந்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதும், ஆனந்தனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி, அவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

வாட்ஸ் அப் குழுவில் கிரேசி பாய்ஸ் என்ற பெயரில் ஆபாச படத்தை வைத்து அப்பகுதியில் சுற்றியுள்ள சிறுவர்களை வேட்டையாடி கடந்த 3½ ஆண்டுகளாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவரது குரூப்பில் கவர்ச்சியான இளம்பெண்கள் படம், ஆபாச வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதற்கு சிலர் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர். இதற்கு அடிமையான சிலரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை கார்த்தி அழைத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

தனது குரூப்பில் உள்ள ஆனந்தனுக்கு சம்பவத்தன்று நாட்டியாலயா நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அழைப்பு விடுத்தார். அதனை நம்பி ஆனந்தனும் வந்தார். அங்கு உல்லாச ஆசையை தூண்டும் மாத்திரைகளை மதுவில் கலந்து கார்த்தி குடித்தார். பின்னர் ஆனந்தனை அழைத்து கொண்டு பச்சூர் மேம்பாலம் அருகில் சென்று, அவரை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டார். பின்னர் கார்த்தி, பாலாஜி ஆகிய 2 பேரும் அருகில் உள்ள தண்டவாளத்திற்கு அழைத்து சென்றனர்.

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட விவரத்தை வெளியே சொல்லிவிட்டால் அசிங்கம் என நினைத்து ஆனந்தனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பிணத்தை தண்டவாளத்தில் வீசினர். ரெயிலில் அடிபட்டு இறந்துபோல் இருக்கட்டும் என அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் இதேபோன்று நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த சிவாஜி என்பவரின் மகன் ஸ்ரீராம் (14) என்ற சிறுவனை கடந்த ஆண்டு நாட்டியாலயா நிகழ்ச்சி அழைத்து சென்று, அந்த சிறுவனையும் கொலை செய்து பச்சூர் - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கார்த்தி, பாலாஜி ஆகிய 2 பேரையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்து, வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story