புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கிரண்பெடி உத்தரவு


புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2019 5:12 AM IST (Updated: 15 July 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். ஆய்வின்போது நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.

புதுவையில் கடந்த 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்தது. எனவே காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் எவ்வாறு உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த தொட்டிகள் மூலம் மழைநீர் சேகரிக்கப்படுவதை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அந்த பகுதியில் மேலும் 2 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி புதுவை பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்றார். அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 4 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் புதுவை பல்கலைக்கழக வளாகம் பரந்துவிரிந்து காணப்படுகிறது. எனவே இந்த இடத்திற்கு 4 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இந்த ஆய்வின் போது கவர்னர் மாளிகை அதிகாரிகள், பொதுப்பணித்துறை, நகர அமைப்பு குழும அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story