ஜெர்மன் நிறுவனத்தில் அதிக முதிர்வு தொகை பெற்றுத்தருவதாக கூறி - ரூ.6 கோடி மோசடி செய்த கோவை தொழில் அதிபர் கைது
ஜெர்மன் நாட்டு நிறுவனத்தில் அதிக முதிர்வு தொகை பெற்றுத்தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த கோவை தொழில் அதிபரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அறிவொளி நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 46). இவர் கொசுவர்த்தி தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கோவை குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த செந்தில்குமார் (48) என்பவர் அறிமுகமாகி உள்ளார். செந்தில்குமார் கோவை சிட்கோவில் சொந்தமாக லேத் ஒர்க்ஷாப் வைத்து உள்ளார்.
இந்த நிலையில் சுகுமாரை சந்தித்த தொழில் அதிபர் செந்தில் குமார் ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 4 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி முதிர்வு தொகையாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சுகுமார் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து சிறு, சிறு தொகையாக ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஜெர்மன் நாட்டு நிறுவனத்திடம் செந்தில்குமார் மூலமாக முதலீடு செய்து உள்ளார்.
இதற்கிடையே முதிர்வு காலம் முடிந்ததை தொடர்ந்து முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுத்தரும்படி செந்தில்குமாரிடம், சுகுமார் கேட்டுள்ளார். அப்போது செந்தில்குமார் ஜெர்மன் நாட்டில் உள்ள அந்த நிறுவனத்தில் ஒருசில பிரச்சினை காரணமாக முதிர்வுத்தொகை பெற சில காலங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் முதலீடு செய்த தொகையை திருப்பி தராமல் அவர் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சுகுமார் மட்டுமின்றி, சீனிவாசன், சிவக்குமார், விஜயலட்சுமி, ஆர்த்தி கோவிந்தராஜ் உள்பட 30-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.6 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவுப்படி, துணை கமிஷனர் செல்வகுமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் போலீசார் செந்தில்குமாரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.
Related Tags :
Next Story