வெள்ளகோவில் அருகே, பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் - 4 பேர் உடல் நசுங்கி பலி


வெள்ளகோவில் அருகே, பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் - 4 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 15 July 2019 12:00 AM GMT (Updated: 15 July 2019 12:12 AM GMT)

வெள்ளகோவில் அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

வெள்ளகோவில்,

கோவை மாவட்டம் சூலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரங்கசாமி மகன் முரளிகண்ணன் (வயது 33). இதே ஊரைச் சேர்ந்த ரங்கநாதபுரம் அய்யாசாமி மகன் சுரே‌‌ஷ் (35). பல்லடம் கோம்பைக்காட்டுப்புதூர் மகாலட்சுமி நகர் கலுவதேவர் மகன் பாலச்சந்திரன் (37). நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, கோட்டை யாதவர் கல்லக்காட்டை சேர்ந்தவர்கள் கிரு‌‌ஷ்ணன் மகன் நடராஜ் (29), முருகன் மகன் சுந்தரம் (25),சந்தானகுமார் மகன் சொர்ணமூர்த்தி (20).

இவர்கள் அனைவரும் சூலூரில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுடன் வேலை பார்த்த முத்துக்குமார் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் தனது சொந்த ஊரான காரைக்கால் சென்று விட்டார். அவரை பார்ப்பதற்காக சக பணியாளர்கள் 6 பேரும் நூல் மில் மேலாளரின் காரை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் சென்ற கார் வெள்ளகோவிலில் கரூர் தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடை பிரிவு அருகே சென்றது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முரளிகண்ணன், காரில் வந்த நடராஜ், சுந்தரம், சொர்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சுரே‌‌ஷ், பாலச்சந்திரன் இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த இருவரையும் மீட்டு வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 22 பயணிகளும் காயமின்றி தப்பினர்.

தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், திருப்பூர் தெற்கு மாவட்ட போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், அரசு போக்குவரத்துக்கழக கரூர் கிளை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இப்பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கரூர் கடவூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகானந்தனை(44) வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்..

உடல்நிலை சரியில்லாத நண்பரை பார்க்க சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story