ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை வழங்க கோரி பீடித்தொழிலாளர் தர்ணா போராட்டம்


ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை வழங்க கோரி பீடித்தொழிலாளர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை கேட்டு பீடித்தொழிலாளர்கள் தாலுகா அலுவலகம் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 1000 பேர் பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆங்காங்கே குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் பகுதியில் 20 ஏக்கர் ஆதிதிராவிட நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உள்ளனர். ஆனாலும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதை கண்டித்தும், உடனே வீட்டுமனைகள் வழங்கக் கோரியும் பீடித் தொழிலாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். அப்போது, பீடி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தாசில்தார் வில்சனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story