ஜெயங்கொண்டம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கவிடாமல் முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு


ஜெயங்கொண்டம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கவிடாமல் முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2019 4:45 AM IST (Updated: 16 July 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு என நகராட்சி மூலம் குடிநீர் வழங்க கடந்த 1998-ம் ஆண்டு கரடிகுளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர்த்தேக்கத் தொட்டி மூலம் நீர் ஏற்றி 18-வது வார்டில் வசிக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆங்காங்கே வறட்சி நிலவிவருவதால் அந்த ஆழ்குழாய் கிணற்றின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதேபோல் 18-வது வார்டில் வசிக்கும் இருளர் சமூக மக்களும் தாங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என மனு அளித்தனர். இதையடுத்து 18-வது வார்டு பொதுமக்களுக்கு என பொதுவாக ஏற்கனவே இருந்த ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க பூமி பூஜை நேற்று காலை நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இருளர் சமூக மக்கள் ஆழ்குழாய் கிணறு தாங்களுக்கு வந்ததை தான், பொதுவாக அமைக்கிறார்கள் என நினைத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், இது 18-வார்டு பொதுமக்களுக்கு பொதுவாக அமைக்க வந்தது எனவும், தாங்களுக்கு என தனியாக ஏதும் வரவில்லை எனவும் எடுத்து கூறி, அதற்கான நகலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காண்பித்தனர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட விவசாய சங்க பொருளாளர் உத்திராபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். செய்தி உண்மை தன்மையை அறிந்த இருளர் சமூக மக்கள் தாங்களுக்கு தனி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர், அதிகாரிகளிடம் இதுகுறித்து கூறி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது தட்டுப்பாடின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்தினர் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை நடத்தி பணியை தொடங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story