சுற்றுலா பயணிகள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றது: துபாரேயில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்
சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று துபாரேயில் மீண்டும் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
குடகு,
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே துபாரே கும்கி யானைகள் முகாம் உள்ளது. இந்த யானைகள் முகாமை ஓட்டி காவிரி ஆறு ஓடுகிறது. துபாரே யானைகள் முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள், காவிரி ஆற்றில் படகு சவாரி மேற்கொள்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கும், படகை இயக்குபவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் ஆந்திர பயணி துடுப்பால் அடித்து கொலை செய்யப்பட்டார். மேலும் படகுகளை இயக்குபவர்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் துபாரேயில் படகு சவாரியை மாவட்ட நிர்வாகம் தடை செய்து விட்டது.
படகு சவாரி தொடக்கம்
இந்த நிலையில் தற்போது குடகில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூால் நிலவி வருகிறது. இதனால் குடகிற்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் துபாரே யானை முகாமிற்கும் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே துபாரேயில் மீண்டும் படகு சவாரியை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், துபாரேயில் மீண்டும் படகு சவாரியை தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி துபாரேயில் மீண்டும் படகு சவாரி தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து துபாரேவுக்கு சுற்றுலா வரும் உற்சாகமாக படகு சவாரியை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story