கோலார் மாவட்டத்தில் ஜலசக்தி அபியான் திட்டம் தொடக்கம் கலெக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார்
கோலார் மாவட்டத்தில் ஜலசக்தி அபியான் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் ஒரு மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி தொடங்கி வைத்தார்.
கோலார் தங்கவயல்,
மத்திய அரசு ஜலசக்தி அபியான்(நிலத்தடி நீர் பாதுகாப்பு) என்ற திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. கோலார் மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் கலந்து கொண்டு ஒரு மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜலசக்தி அபியான் திட்டம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். மேலும் இயற்கை வளமான தண்ணீரை நாம் வருங்கால தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக நதிகள், ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை பெற்று குடித்து வந்தோம்.
710 மாவட்டங்களில்...
சமீப காலமாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பெற்று பருகி வருகிறோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 1,500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதேநிலை நீடித்தால் வருங்கால சந்ததியினர் தண்ணீரை எப்படி பெறுவார்கள் என்றே தெரியவில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் எப்படி அமல்படுத்தப்பட்டதோ அதேபோல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் 710 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் முதல்கட்டமாக 256 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் கோலார் மாவட்டமும் ஒன்று.
தண்ணீரை சேமிக்க வேண்டும்
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக மாணவ சமுதாயத்தினர், தொண்டு நிறுவனத்தினர் திறம்பட செயல்படுத்த முன்வர வேண்டும். மத்திய அரசு இந்த ஆண்டை ஜலவர்ஷா வருடமாக(தண்ணீர் வருடம்) அறிவித்துள்ளது. அதன்படி நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை தூர்வாரி தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி ஜெகதீஷ் பேசுகையில், “இந்த ஆண்டு, கோலார் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது“ என்று கூறினார்.
Related Tags :
Next Story