மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய குடியுரிமை கேட்டு இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய குடியுரிமை கேட்டு கலெக்டரிடம் இலங்கை அகதிகள் மனு கொடுத்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கடந்த 30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கிடையில் திருச்சியில் 65 அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு கோர்ட்டு ஆலோசனை வழங்கியது. எனவே, எங்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டால் தான் அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்கும்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சிற்பி மணிகண்டன். இவர் கலெக்டரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பூம்புகார் மாநில விருதுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குமிழ் என்ற மரத்தின் மூலம் சிவன் நடனம் என்ற தலைப்பில் சிற்பம் செய்தேன். அந்த சிற்பத்தை சென்னை பூம்புகார் கைத்திறன் தொழில் வளர்ச்சி கழக அலுவலகத்தில் ஒப்படைத்தேன். அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டேன். ஆனால் நான் செய்த சிற்பத்தை அதிகாரிகள் உடைத்து எனக்கு பரிசு கிடைக்காமல் செய்துவிட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, சிற்பம் உடைந்ததற்கான பணத்தை தந்து விடுகிறோம். ஆனால் விருது தரமுடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.
Related Tags :
Next Story