மினிலாரி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி தூத்துக்குடி அருகே பரிதாபம்


மினிலாரி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி தூத்துக்குடி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 16 July 2019 4:00 AM IST (Updated: 16 July 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மினி லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மகன் அருண்குமார் (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவில் முதலாமாண்டு மைக்ரோ பயாலஜி படித்து வந்தார். அதே பாடப்பிரிவில் முத்தையாபுரம் ஆனந்தன்நகர் 2-வது தெருவை சேர்ந்த சக்கையன் மகன் கற்பகவேலன் (19) என்பவரும் படித்து வந்தார்.

நண்பர்களான இவர்கள் நேற்று காலை அருண்குமாரின் புதிய மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் சென்றனர். அங்கு இருவரும் செல்பி எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உள்ளனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார்.

முள்ளக்காடு அருகே மதிகெட்டான் ஓடை பாலத்தை கடந்து வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்ற மினி லாரி, மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மினி லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். விபத்தில் சிக்கிய மினிலாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த மூலக்கரையை சேர்ந்த பாலமுருகன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருண்குமாரின் தந்தை லட்சுமணன் ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். அவரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு அடம் பிடித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அருண்குமார் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிள் 200 சி.சி. திறன் கொண்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்னும் நம்பர் வாங்கவில்லை. அதற்குள் 2 உயிர்களை பழிவாங்கி உள்ளது அந்த மோட்டார் சைக்கிள். இந்த விபத்தை ஏற்படுத்திய மினி லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இருந்த டிரைவர் பாலமுருகன் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். போலீசார் கிரேனை வரவழைத்து பள்ளத்தில் விழுந்த மினி லாரியை மீட்டனர். இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story