கபிஸ்தலம் அருகே தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே தந்தை, மகனை அரிவாளால் வெட்டியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது52). விவசாய தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு உமையாள்புரம் கடைத்தெருவில் இருந்து தனது வீட்டுக்கு செல்வராஜ், அவருடைய மகன் வேல்முருகன்(25) ஆகிய 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராஜா, அஜித், அய்யப்பன், உமையாள்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அருள்பிரகாஷ் (24), புளியம்பட்டி குடியான தெருவை சேர்ந்த தண்டபாணி மகன்கள் கபில் (24), தினேஷ் (23), விஜய் (24), கருப்பையன் (48), கணேசன் (50) ஆகிய 9 பேரும் சேர்ந்து, செல்வராஜையும், அவருடைய மகன் வேல்முருகனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வாக்குப்பதிவு செய்து கபில், அவருடைய தம்பி தினேஷ், விஜய், கருப்பையன், கணேசன், அருள்பிரகாஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story