வேதாரண்யத்திற்கு படகில் வந்த இலங்கையை சேர்ந்தவர் கைது
வேதாரண்யத்திற்கு படகில் வந்த இலங்கையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு இலங்கையில் இருந்து கஞ்சா மூட்டை எடுத்து செல்ல படகு மூலம் ஆட்கள் வருவதாக கியூ பிரிவு போலீ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் கடற்கரையை அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில் ஒரு படகு வேகமாக வருவது தெரிய வந்தது. கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அந்த படகு வந்தபோது அந்த படகில் இருந்த ஒருவரை கடலுக்குள்ளேயே இறக்கி விட்டு விட்டு படகில் வந்த மேலும் 2 பேர் வேக, வேகமாக மீண்டும் கடலுக்குள் படகை ஓட்டிச் சென்று விட்டனர்.
படகில் இருந்து இறக்கி விடப்பட்டவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி மணியன்தீவு கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் வேதாரண்யம் வந்து அங்கிருந்து பஸ் மூலம் நாகை செல்லும்போது கள்ளிமேடு அருகே கியூ பிரிவு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அவரது பெயர் பார்த்தசாரதி(வயது 40) என்பதும், இலங்கை வெல்வெட்டிதுறையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து இலங்கை பணமும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை வேதாரண்யம் போலீசாரிடம், கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை வேதாரண்யம் போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்்.
கைதான பாரத்தசாரதி, கடந்த 1991-ம் ஆண்டு நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு இலங்கை அகதிகள் முகாமில் இருந்தவர் என தெரிய வந்தது.
Related Tags :
Next Story