சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், வேளாண்துறை இளங்கலை படிப்புகளுக்கு ‘ரேண்டம்’ எண் வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்துறை இளங்கலை பட்ட படிப்புகளுக்கான ‘ரேண்டம்’ எண் நேற்று வெளியிடப்பட்டது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை துறையில் இளங்கலை பாடப்பிரிவில் உள்ள பட்டம், பட்டயப்படிப்புகள் மற்றும் சுயநிதி பிரிவில் இளம் அறிவியல் வேளாண்மை பட்டப்படிப்புக்கு 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இதன் முடிவில் நேற்று ‘ரேண்டம்’ எண் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் வே. முருகேசன் கலந்து கொண்டு ‘ரேண்டம்’(சம வாய்ப்பு) எண்ணை இணையதளத்தில் வெளியிட்டார். மாணவர்கள் www.annamalaiuniversity.ac.in. என்கிற இணையதளத்தின் மூலம் ‘ரேண்டம்’ எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) செல்வநாராயணன், வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த் மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து துணை வேந்தர் வே.முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில், மாணவர் சேர்க்கை முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெறும். மாணவர்கள் மேல் நிலை படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள், தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story