தாராவியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் சாவு
தாராவியில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மும்பை,
மும்பை தாராவி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முன்னா ஜெய்ஸ்வர்(வயது38). இவரது மனைவி சீமா(32). இவர்களுக்கு ஆனந்த்(12), சுமித் முன்னா(8), அமித்(6), மகேஷ்(3) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் சுமித் முன்னா நேற்று பிற்பகல் 3 மணியளவில் அங்குள்ள சாக்கடை கால்வாயில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் நண்டு பிடிக்க சென்று இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, கால் தவறி அவன் சாக்கடை கால்வாயில் விழுந்து விட்டான். இதில், கழிவுநீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்து மற்ற சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவிகேட்டு கூச்சல் போட்டனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் சிறுவன் சுமித் முன்னா கழிவுநீரில் மூழ்கிவிட்டான்.
சாவு
இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை சாக்கடையில் இருந்து மீட்டனர். உடனடியாக அவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் இறந்ததை அறிந்து அவனது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3-வது சம்பவம்
மும்பையில் கடந்த ஒரு வாரத்தில் தண்ணீருக்குள் தவறி விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பது இது 3-வது சம்பவம் ஆகும். கோரேகாவில் கடந்த புதன்கிழமை இரவு திவ்யான்ஷ் என்ற 3 வயது சிறுவன் சாக்கடைக்குள் தவறி விழுந்தான். அவனது உடல் இன்னும் மீட்கப்படவில்லை.
ஒர்லியில் கடந்த சனிக்கிழமை அன்று கடற்கரை சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி பப்லுகுமார் என்ற 12 வயது சிறுவன் பலியானான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story