நாயர் ஆஸ்பத்திரியில் 3 டாக்டர்கள் மீது தாக்குதல் உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு
நாயர் ஆஸ்பத்திரியில் 3 டாக்டர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட ராஜ்கிஷோர்(வயது49) என்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் திரண்ட நோயாளியின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கவுரவ் குன்ஜன் உள்பட 3 டாக்டர்களை தாக்கினர். இதை தட்டிக்கேட்ட காவலாளியையும் தாக்கினர். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த பொருட்களையும் சூறையாடினர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து அக்ரிபாடா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் டாக்டர்களை தாக்கியதாக இந்திய தண்டனை சட்டம் மற்றும் மராட்டிய மருத்துவர் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மும்பையில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாயர் ஆஸ்பத்திரியில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மராட்டிய மாநில பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story