சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிரடி நடவடிக்கை 91 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் மராட்டிய அரசு உத்தரவு
மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் 91 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
அதிரடி மாற்றம்
இந்த நிலையில் மராட்டிய அரசு நேற்று ஐ.பி.எஸ். மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் 91 பேரை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து நேற்று இரவு உத்தரவிட்டது.
இவர்கள் அனைவரும் துணை போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து உடைய போலீஸ் அதிகாரிகள் ஆவர்.
இந்த இடமாற்ற பட்டியலின்படி சந்தர் கிஷோர் மீனா, பிரணய் அசோக், அங்கித் கோயல், ரஞ்சன் சர்மா, சோம்நாத் கார்கே, மோகன் தஹிகர், ஸ்ரீகாந்த் பரோப்கர், டி.எஸ்.சுவாமி, நந்த்குமார் தாக்கூர் ஆகியோர் மும்பையில் துணை போலீஸ் கமிஷனராக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு
ஐ.பி.எஸ். அதிகாரிகள் விக்ரம் தேஷ்மனே மற்றும் வினய்குமார் ரத்தோட் ஆகியோர் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் சட்டமன்ற கட்டிடமான விதான் பவன் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவின் பாட்டீல், தற்போது நவிமும்பை குற்றப்பிரிவு தலைமை பொறுப்பிற்கு மாற்றப்பட்டார்.
போலீஸ் சூப்பிரண்டுகள்
மும்பை (மண்டலம் 1) துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் அபிஷேக் திரிமுகே, மாநில போலீஸ் தலைமையகத்தின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக மாற்றப்பட்டு உள்ளார்.
கோண்டியாவில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த வனிதா சாகு நவிமும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹரி பாலாஜி அமராவதி கிராமப்புற போலீஸ் சூப்பிரண்டாகவும், ஹர்ஷ் போட்டர் பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், அமோக் கோன்கர் அகோலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், பண்டித் கம்லாக்கர் நந்துர்பர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், மங்கேஷ் ஷிண்டே கோண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கவர்னர் பாதுகாப்பு அதிகாரி
ராஜ்குமார் ஷிண்டே மற்றும் சமர்தா பாட்டீல் ஆகியோர் தானே நகர போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளனர்.
இதேபோல் கவர்னர் பாதுகாப்பு அதிகாரியாக ரூபாலி அம்புரே நியமிக்கப்பட்டார். கடலோர பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை துணை போலீஸ் கமிஷனராக நாம்ரதா பாட்டீல் மாற்றப்பட்டு உள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒரே நாளில் 91 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story