தாளவாடி அருகே பரபரப்பு, நடுரோட்டில் நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்த யானைகள்
தாளவாடி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் உள்ள செடி-கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்துவிட்டன. மேலும் வனக்குட்டைகளும் வறண்டு காணப்படுகிறது.
இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையோரங்களில் உலா வருகின்றன. குறிப்பாக யானைகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்கின்றன. மேலும், யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை தாளவாடி அருகே தலமலை ராமரணை பகுதியில் குட்டியுடன் 2 யானைகள் ரோட்டில் சுற்றித்திரிந்தன.
பின்னர் அந்த யானைகள் நடுரோட்டில் நின்று கொண்டன.
அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானைகள் நடுரோட்டில் நிற்பதை கவனித்ததும் சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்தினார்கள். நடுரோட்டில் குட்டியுடன் 2 யானைகள் வழிமறித்தபடி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் வாகனஓட்டிகள் கீழே இறங்கி வந்து யானைகளை வேடிக்கை பார்த்தனர். ஒருசிலர் யானைகளின் அருகே சென்று, செல்போனில் படம் பிடித்தனர். அப்போது திடீரென யானைகள் ஆவேசமடைந்து வாகன ஓட்டிகளை நோக்கி வேகமாக ஓடி வந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் துரத்தியதால் பயந்துபோன வாகன ஓட்டிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அதேஇடத்தில் வந்து யானைகள் நின்று கொண்டன. சுமார் ½ மணி நேரம் அந்த யானைகள் ரோட்டில் நின்றன. இதைத்தொடர்ந்து தானாகவே யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். இதேபோல் பவானிசாகர் அருகே உள்ள புங்கார் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அதனால் யானைகள் கிராமப்பகுதிக்குள் புகாத வகையில் அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story