நாடார் மகாஜன சங்கம் சார்பில் விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழா பேரணி


நாடார் மகாஜன சங்கம் சார்பில் விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழா பேரணி
x
தினத்தந்தி 16 July 2019 5:05 AM IST (Updated: 16 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

விருதுநகர், 

விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. விழாவின் 2-வது நாளான நேற்று காலையில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு முன்பு நோட்டு-புத்தகங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்தும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் இருந்தும் வந்த பொதுமக்கள் காமராஜர் சிலைக்கு முன் நோட்டுப் புத்தகங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணியை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி தொடங்கி வைத்தார். பேரணியில் காமராஜரின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு வகையில் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் இடம் பெற்றன.

மேலும் இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என ஆடிப்பாடி பேரணியில் வந்தனர். இந்த பேரணி நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடந்த கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது.

அந்த பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசினர். சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் கல்வி, விவசாயம், தொழில் ஆகியவற்றில் புரட்சி ஏற்பட செய்த சாதனைகளை குறிப்பிட்டு பேசினார். இதனை தொடர்ந்து இலக்கிய பேச்சாளர் சுகி.சிவம் காமராஜர் பற்றி சொற்பொழிவாற்றினார்.

இதனை தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story