மருத்துவ கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் பெயரை நீக்கக்கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மருத்துவ கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் பெயரை நீக்கக்கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2019 4:30 AM IST (Updated: 16 July 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கலந்தாய்வில் வெளிமாநில மாணவர்கள் பெயரை நீக்கக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடம் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் 1,800 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ளன. இதில் மாநில இட ஒதுக்கீட்டின்கீழ் 977 மாணவர்களுக்கும், 562 இடங்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

8-ந்தேதி இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி (அதாவது நேற்று) தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் தனியார் மருத்துவ சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்திவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்து முடிக்கும் இவர்கள், வெளிமாநிலங்களுக்கு சென்றுவிடுவார்கள். இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. மேலும் இந்த ஆண்டு 218 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

எனவே, தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் செயலாளர் 2019-20-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் தமிழக இளங்கலை மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story