வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ; பொதுமக்கள் அவதி


வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 16 July 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக தீ எரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி அவதி அடைந்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

 இந்த நிலையில் கடந்த 14–ந் தேதி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

தொடர்ந்து 3–வது நாளாக நேற்று குப்பை கிடங்கில் தீ எரிந்தது. நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 30–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் பரவி வருகிறது. லாரிகளில் தண்ணீர் வெளியே இருந்து கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் கிளறப்பட்டு தீயை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறார்கள்.  

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் தீயணைப்பு வீரர்கள் நுழைய முடியாத அளவிற்கு புகை மூட்டமும், தீயின் வெப்ப தாக்கமும் அதிகமாக உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக         காட்சி       அளிக்கி றது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.

குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை முழுவதும் அணைக்க, மேலும் 2 நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story