ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்


ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்
x
தினத்தந்தி 17 July 2019 4:45 AM IST (Updated: 16 July 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

ரூ.17 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 38). இவருக்கு கடந்த ஆண்டு முகநூல் மூலமாக மாதேஷ் என்பவர் பழக்கமானார். அப்போது மாதேஷ், இந்திராணியிடம் ‘வாவ் காயின்’ வர்த்தகம் குறித்து அறிமுகப்படுத்தியுள்ளார். அண்ணாநகரை சேர்ந்த பெண் பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு (48), அவரது மகள் ஆர்த்தி அன்னாவரம் மற்றும் அவர்களது நண்பர் கிளைண்ட் ஜோசப் ஆகிய 3 பேரை தொடர்பு கொண்டால் ஆன்லைனில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அந்த 3 பேரும் இந்திராணியிடம், குறிப்பிட்ட தொகை ஒன்றை நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை பெருகி பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என்று அவரிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

இதையடுத்து, அவர்களின் ஆசைவார்த்தையை நம்பிய இந்திராணி, தனது வங்கிக்கணக்கிலிருந்து ஆன்லைனில் ரூ.17 லட்சத்தை பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலு நடத்தி வந்த நிறுவன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் 6 மாதத்திற்கு பின்னரும் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில், பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதன் பின்னர் இந்திராணி விசாரித்தபோதுதான் தன்னிடம் பெற்ற பணத்தை எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் அவர்கள் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த இந்திராணி அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திராணி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் (லுக்-அவுட் நோட்டீஸ்) தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பிச்செல்ல முயன்ற பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலுவை விமானப்படை அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து, அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பத்மஜ் பொம்மி செட்டி சீனிவாசலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story