குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது மேலும் 6 பேருக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்


குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது மேலும் 6 பேருக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 17 July 2019 3:45 AM IST (Updated: 16 July 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பஜார் பகுதியில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த காரில் இருந்து ஒரு கும்பல் கீழே இறங்கியது. அவர்கள் அங்குள்ள ஒரு கடையில் டீ வாங்கி குடித்தனர். அப்போது அந்த கார் மட்டும் தனியாக குலுங்கியது. இதைக்கண்ட அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே, கார் அருகில் சென்று, கதவை திறந்து பார்த்தனர். அப்போது காரின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அதேசமயத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த கும்பல் ஒவ்வொருவராக நைசாக அந்த இடத்தில் இருந்து நழுவ தொடங்கினர்.

இதைக்கண்டு உஷார் அடைந்த பொதுமக்கள் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காருக்குள் கட்டி போடப்பட்டு இருந்தவரை மீட்டு, அவரையும், காரையும் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கும்பலை சேர்ந்தவர்கள் ஓட்டம் பிடித்த பகுதிக்கு விரைந்து சென்று 2 பேரை மடக்கிப்பிடித்தனர். இந்த சம்பவம் சினிமாவில் வில்லன்கள் சேர்ந்து ஒருவரை கடத்தி செல்வது போல் பரபரப்பாக இருந்தது.

அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள், சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தை சேர்ந்த வேல்சாமி மகன் முத்துக்குமார் (வயது 33), ஆட்கொண்டார்குளம் குருசாமி மகன் வசந்த் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்டவர் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கிருஷ்ணரெட்டி மகனான தொழில் அதிபர் ராம்ஜி என்ற ராம்ஜியு ரெட்டி (30) என்பதும் தெரியவந்தது.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராம்ஜி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது விமான நிலையங்களில் சுங்க இலாகா மூலம் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்க கட்டிகள் தங்களிடம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் பேசி உள்ளனர். இதை நம்பிய ராம்ஜி தங்கம் எங்கே உள்ளது? என்பது போன்ற விவரங்களை கேட்டு உள்ளார். அதற்கு அந்த கும்பல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ரகசியமாக பதுக்கி வைத்துள்ளோம். வேறு இடத்துக்கு எடுத்து செல்ல முடியாது. இங்கு வந்தால் குறைந்த விலைக்கு வாங்கி செல்லலாம் என்று கூறி உள்ளனர்.

இதை நம்பிய ராம்ஜி, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தார். அங்கு அவரை நெல்லை மாவட்ட கும்பல் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் ராம்ஜியின் சொந்த காரிலேயே அவரை சங்கரன்கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தனர்.

சங்கரன்கோவில் பகுதியில் வைத்து, தங்கம் வாங்குவதற்கு பணம் ஏதும் கொண்டு வந்து உள்ளாரா? என்று ராம்ஜியிடம் விசாரித்தனர். அப்போது ராம்ஜி தான் செலவுக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் எடுத்து வந்ததாகவும், தங்கத்தை நேரில் பார்த்து விட்டு, விலை பேசி முடிவான பிறகே பணத்தை கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறி உள்ளார்.

இது அந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ராம்ஜி தங்கம் வாங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் கொண்டு வந்தால், அவரிடம் இருந்து அந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தங்களது எண்ணம் நிறைவேறாததால் ராம்ஜியை கடத்தி வைத்து மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற அடுத்தகட்ட திட்டம் தீட்டினர்.

இதையடுத்து ராம்ஜியை காருக்குள் வைத்து சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரம், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். மேலும் அவரது வங்கி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.40 ஆயிரத்தையும் பரிமாற்றம் மூலம் எடுத்துள்ளனர். பின்னர் ராம்ஜியின் குடும்பத்தினரிடம் பேசி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினர். அதே நேரத்தில் அவர் தப்பி விடாமல் இருக்க கை, கால்களை கட்டி காருக்குள் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் சுற்றித்திரிந்தனர். இந்த நேரத்தில்தான் சுரண்டை அருகே டீ குடிக்க இறங்கியபோது சிக்கிக் கொண்ட விவரம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து முத்துக்குமார், வசந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் சங்கரன்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தப்பி ஓடிய 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story