சேதமான சாலையால் 13 ஆண்டுகள் தவிப்பு, பகலில் உலாவும் யானைகளால் மலைக்கிராம மக்கள் அச்சம் - கலெக்டர் அலுவலகத்தில் மனு


சேதமான சாலையால் 13 ஆண்டுகள் தவிப்பு, பகலில் உலாவும் யானைகளால் மலைக்கிராம மக்கள் அச்சம் - கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 6:22 PM GMT)

சேதமான சாலையால் 13 ஆண்டுகளாக தவிப்பதோடு, பகலில் உலாவும் யானைகளால் அச்சத்தில் வாழ்வதாக மலைக்கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் வில்பட்டி மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பாரதிஅண்ணாநகர், கணேசபுரம், புலியூர், அஞ்சூரான்மந்தை மற்றும் பேத்துப்பாறை பகுதிகளை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்களுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் சாலை வசதி கோரியும், விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டக்கோரியும் மனுகொடுத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பாரதிஅண்ணாநகர் உள்பட 5 குடியிருப்பு பகுதிகளிலும் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும், அன்றாட தேவைக்காக கொடைக்கானலுக்கு சென்றுவருவதற்காகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது.

அந்த சாலை சேதமாகி 13 ஆண்டுகளாகி விட்டது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சாலை முற்றிலும் உருக்குலைந்தது. தற்போது சாலை முழுவதும் ராட்சத பள்ளம் உருவாகி விட்டது. இதனால் சாலை வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் ஆபத்தான பள்ளத்தாக்குகள் உள்ளதால் பள்ளி மாணவர்களை வேனில் அழைத்து செல்லவே பயமாக உள்ளது. விளை பொருட்களையும் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, புதிதாக தார்சாலை அமைத்து தரவேண்டும்.

மேலும் பலா, சவ்சவ், பீன்ஸ், காபி போன்றவற்றை பயிரிட்டு வருகிறோம். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. அதிலும் சமீபகாலமாக யானைகள் கூட்டம், கூட்டமாக பகல் நேரத்திலும் சுற்றித்திரிகின்றன. இதனால் காலை 8 மணிக்கு மேல் தான் மக்கள் வெளியே வரமுடிகிறது.

அதேபோல் மாலையில் 4 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியவில்லை. சில நாட்கள் மதிய வேளையில் நடுரோட்டில் யானைகள் நிற்கின்றன. இதனால் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, வனவிலங்குகளின் தொல்லையை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story