அம்பரப்பர் மலைக்கு சென்றவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி


அம்பரப்பர் மலைக்கு சென்றவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2019 4:45 AM IST (Updated: 16 July 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

கம்பம்,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் மத்திய அரசு சார்பில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணுசக்தி ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

இதனால் நியூட்ரினோ திட்டம் குறித்த அச்சம் பொட்டிபுரம் மக்களிடம் மீண்டும் எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நேற்று காலை பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்கு செல்ல இருந்தார்.

ஆனால், வழியில் தேவாரம் அருகே டி.புதுக்கோட்டை கிராமம் முத்தாலம்மன் கோவில் அருகே போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இங்கு போராட வரவில்லை. மக்களை சந்தித்து பேசவும், அம்பரப்பர் மலையை பார்க்கவும் தான் வந்தேன். ஆனால், நான் காலையில் புறப்படும் போது, நீங்கள் பொட்டிபுரம் வரக்கூடாது. தேவாரம் வட்டாரத்தில் எங்குமே பேட்டி அளிக்கக்கூடாது என போலீசார் போனில் மிரட்டல் விடுக்கிறார்கள். நான் என்ன தீவிரவாதியா?. நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிரு‌‌ஷ்ணாபுரம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். அவர்களை சந்தித்து பேசத்தான் வந்தேன்.

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை உலக பிரசித்தி பெற்ற மலை. இமயமலை தோன்றுவதற்கு முன்னதாகவே இந்த மலை உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால் பேரழிவு ஏற்படும் என தீவிரமான போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேசமயம் இந்தத் திட்டத்தால் என்ன பயன்? என்கின்ற கருத்தும் போராட்ட களத்தில் இருக்கின்றது. ஆகவே இரண்டு கருத்துக்களை வைத்து நீதிமன்றம் சென்று இந்த திட்டத்திற்கு தடை பெற்றிருக்கின்றோம்.

சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமான அனுமதியை கொடுத்து அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் கிராமம் அப்புறப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அவர்களின் அச்சத்தைப் போக்க, நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு சட்டசபையில் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள பகுதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதிக்கு உட்பட்டது. எனவே அவர் நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும். இதேபோல் எதிர்கட்சிகளும் சட்டசபையில் நியூட்ரினோ ஆய்வுமையம் குறித்த கருத்துக்களை விவாதிக்கவேண்டும். மத்திய அரசு, நல்ல திட்டங்களை தமிழகத்தில் திணிக்க முயற்சி செய்யவில்லை. தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை போலீசை வைத்து அச்சுறுத்தி செயல்படுத்தி வருகின்றது. இதற்கு தமிழக அரசும் துணைபோகிறது. நியூட்ரினோ திட்டத்தை பேரழிவுத் திட்டம் என்கிறோம். இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும். இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் தேவாரத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார்.

Next Story