முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா நாளைக்கு சபை ஒத்திவைப்பு


முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா நாளைக்கு சபை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 July 2019 5:00 AM IST (Updated: 17 July 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு சபை 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். அதுவரை சபையை நடத்தக்கூடாது என்று பா.ஜனதா விடுத்த வேண்டுகோளை சபாநாயகர் ஏற்றார். சபையை நாளை (வியாழக்கிழமை) ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. அப்போது, பா.ஜனதா உறுப்பினர்கள் மேலவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக அவர்கள் தங்களின் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர்.

பதிலுக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி எழுந்து பேசுகையில், “மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்துள்ளனர். ஆட்சி நடத்த தகுதி இல்லாதவர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் தேவை இல்லை“ என்றார்.

அதற்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடா பேசும்போது, “மாநிலத்தில் முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. அதனால் கேள்வி நேரத்தை நடத்த வேண்டும்“ என்றார். அப்போது நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுகையில், “அரசு உயிருடன் இருப்பதால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். கேள்வி நேரத்தை நடத்த எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும்“ என்றார்.

ஆயினும் பா.ஜனதா உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பவில்லை. அவர்கள் கோஷமிட்டபடியே இருந்தனர். இதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் சபை கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே சில உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மந்திரிகள் பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து சபை, நாளை (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

Next Story