உடுமலை, குமரலிங்கத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
உடுமலை, குமரலிங்கத்தில் முன்னாள் மாணவ-மாணவிகள், மடிக்கணினி வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் கல்வி ஆண்டிற்கான மடிக்கணினியை வழங்க வேண்டும் என ஏராளமான முன்னாள் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து குமரலிங்கம் அரசு மேல்நிலை பள்ளியின் முன்பாக அமர்ந்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணி மற்றும் குமரலிங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோஷிலின் அந்தோணியம்மாள், மடத்துக்குளம் தாசில்தார் பழனியம்மாள், துணை தாசில்தார் அருள்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட நேர்முக உதவியாளர் நாகராஜன் ஆகியோர் முன்னாள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள மடிக்கணினி குறித்த அரசாணையை படித்து காண்பித்து விளக்கம் அளித்தனர். மேலும் 15 நாட்களில் முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இதேபோல் காரத்தொழுவு அரசு மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் கடந்த 2018-ம் கல்வி ஆண்டில் வழங்கப்படாத மடிக்கணினியை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நேர்முக உதவியாளர் நாகராஜன், கணியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரி மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முஜிபுர்ரகுமான், நில வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதம் முதல் வாரத்தில் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தனர். இ்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உடுமலையில் நேற்று அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் முன்னாள் மாணவ,மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவிகள் பள்ளிக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் 2017- 2018 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளிக்கு முன்பு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ-மாணவிகளை மறியலை கைவிட வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று விலையில்லா மடிக்கணினி கேட்டு ஜல்லிபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மடிக்கணினி வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story