திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை போலீசார் விசாரணை


திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2019 3:45 AM IST (Updated: 17 July 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நல்லூர், 

தஞ்சாவூர், பெரியகோவில் பின்புறம் சேப்பான வேரி, சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 29). இவர் கடந்த சிலவருடங்களாக திருப்பூர், காங்கேயம் ரோடு, விஜயாபுரம் அருகே உள்ள அங்காளம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக தங்கி இருந்து திருப்பூர் பகுதிகளில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கதவு, ஜன்னல், அலமாரி உள்ளிட்ட மர வேலைப்பாடு தொழில் செய்து வந்தார்.

கடந்த 14-ம் தேதி இரவு கோகுலகண்ணன் மது அருந்தி விட்டு அங்காளம்மன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சில வாலிபர்களுக்கும், கோகுலகண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் கோகுல கண்ணனுக்கு தலை மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் போதையில் இருந்த கோகுலகண்ணன் மீது தண்ணீர் ஊற்றி அவரை அவருடைய அறைக்கு அழைத்து சென்று அறையில் படுக்க வைத்தனர்.

மறுநாள் காலையில் கோகுலகண்ணன் சுய நினைவு இன்றி கிடந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுலகண்ணன் இறந்தார். இது குறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருப்பூர் ஊரக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் அருகில் இருக்கும் வாலிபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் விசாரணைக்கு வராததால் சந்தேகம் ஏற்பட்டு தேடி வருகின்றனர். மேலும் கோகுல கண்ணன் கடைசியாக பேசிய செல்போன் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story