நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கைது 13 மணிநேர விசாரணைக்கு பின்பு விடுவிக்கப்பட்டார்


நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கைது 13 மணிநேர விசாரணைக்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடை அதிபரிடம் ரூ.400 கோடி வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். 13 மணிநேர விசாரணைக்கு பின்பு அவர் விடுவிக்கப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர், பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,640 கோடியுடன் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவாக உள்ளார். இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி மற்றும் மன்சூர்கானிடம் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட கலெக்டர் விஜய் சங்கர் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக மன்சூர்கான் வெளியிட்டு இருந்த ஆடியோவில் தன்னிடம் சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் ரூ.400 கோடி வாங்கிவிட்டு திருப்பிதர மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

மன்சூர்கானின் குற்றச்சாட்டை ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. முற்றிலும் மறுத்து விட்டார். ஆனாலும் ரூ.400 கோடி வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ரோஷன் பெய்க்கிற்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள். அவர் காலஅவகாசம் கேட்டதால் 15-ந் தேதி (நேற்று முன்தினம்) ஆஜராகும்படி போலீசார் கூறி இருந்தனர்.

ஆனால் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள இருப்பதால் விசாரணைக்கு உடனடியாக ஆஜராக முடியவில்லை, அதனால் மேலும் 10 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி ரோஷன் பெய்க் சார்பில் போலீசாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். மாறாக வருகிற 19-ந் தேதி கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

இந்த நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். அவரை துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்திருந்தனர். அதாவது பெங்களூருவில் இருந்து வெளிநாட்டுக்கு ரோஷன் பெய்க் செல்ல இருந்ததாகவும், அதுபற்றி அறிந்த துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் விமான நிலையத்திற்கு சென்று அவரை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கூட்டணி அரசின் மீதான அதிருப்தியால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள ரோஷன் பெய்க், மும்பை ஓட்டலில் தங்கியுள்ள மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. ஏனெனில் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வுடன் விமான நிலையத்தில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. யோகேஷ்வர், எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு தான் அவர் செல்ல இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விமான நிலையத்தில் சிக்கிய ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று மதியம் வரை ரோஷன் பெய்க்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். குறிப்பாக தன்னிடம் ரூ.400 கோடி வாங்கியதாக மன்சூர்கான் கூறி இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் பணம் எதுவும் வாங்கவில்லை என்று ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறியதாக தெரிகிறது. பின்னர் 13 மணிநேர விசாரணைக்கு பின்பு ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை போலீசார் விடுவித்தனர்.

அப்போது ரூ.400 கோடி வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து வருகிற 19-ந் தேதி கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு போலீசார் ரோஷன் பெய்க்கிடம் தெரிவித்துள்ளனர்.

Next Story