எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயார்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி ஆவேசம்


எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயார்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 17 July 2019 5:00 AM IST (Updated: 17 July 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

மத்திய அரசு புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேதாந்தா என்னும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தொடங்கி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை வரை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. நீல கங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. உடனே நான் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் அனுப்பினேன்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோலிய துறை மந்திரி அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாம் அனுப்பிய கடிதத்தை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். புதுவை மாநிலத்தில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் தொடங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மாநில அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே புதுவையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியும். எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் புதுவையில் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story