ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டது - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டது - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்தினை மத்திய அரசு கைவிட்ட நிலையில் தமிழக அரசு சாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் 1333 கிலோ மீட்டர் தூரம் உள்ள 19 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. இந்த பட்டியலில் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் இடையேயான 105 கிலோ மீட்டர் தூர சாலையும் இடம் பெற்று இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கூட்டத்துக்கு வந்திருந்த அப்போதைய மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த பணி தொடங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கவில்லை. இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான சாலையை தரம் உயர்த்துவதால் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இடையே விரைவான வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் இந்த சாலையை தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரப்பட்டு வந்தது. மத்திய அரசு இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த போவதாக அறிவித்ததால் மாநில நெடுஞ்சாலைத்துறையும் இந்த சாலையை தரம் உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது சாலையை மேம்படுத்தும் நிலை பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர், மத்திய அரசு ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையே உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக்கும் திட்டத்தினை ரத்து செய்து விட்டதாகவும், இதனால் இதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்ததுடன் மாநில நெடுஞ்சாலைத்துறை தான் இச்சாலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த சாலையை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக அறிவித்த மத்திய அரசு திடீரென இந்த முடிவில் இருந்து பின் வாங்கியது ஏன் என்று தெரியவில்லை?

எனவே ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் இடையேயான சாலை மேம்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தைகருதி தமிழக அரசு இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மத்திய அரசு இதற்கு முன் வராத பட்சத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Next Story