மரம் வளர்த்து மழை வளத்தை பெருக்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்


மரம் வளர்த்து மழை வளத்தை பெருக்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

மழை வளம் குறைந்து வருவதால் மரங்கள் நட்டு மழை வளத்தை பெருக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி கலந்து கொண்டார். மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா முன்னிலை வகித்தார்.

இதனைதொடர்ந்து நீதிபதி வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

‘மரம் நடு மழை பெறு‘ என்பதை அடிப்படையாக கொண்டு குருவிஷ்ணு என்ற சிறுவன் தன்னந்தனியாக 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நாட்டில் பசுமை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது போல் நாமும் ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகளை அதற்கு பதிலாக நட்டு வைக்க வேண்டும். நாம் பல்வேறு வகைகளில் பசுமையை அழித்ததால் மழை வளம் குன்றி தற்போது மழை குறைந்து வறட்சி நிலவி வருகிறது. ஒரு மரத்துக்கு பின்னால் முகம் தெரியாத பலரின் உழைப்பு உள்ளது. மரத்தை நம்பி பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஒவ்வொரு குடிமகனும் நிறைய மரங்கள் நட்டு இயற்கையைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். நாட்டில் மழை வளம் குறைந்து வருவதால் மரங்கள் நட்டு மழை வளத்தை பெருக்க வேண்டியது நமது கடமையாகும். மரங்களின் அழிவு அதிகமானதால் மழை சீராக பெய்வதில்லை. நாம் ஒரு மரத்தை வெட்டும் போது ஒவ்வொருவரும் 10 மரம் நட வேண்டும் என்று கடமையாக கொண்டு செயலாற்ற வேண்டும்.

நமது நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தனியாக பசுமை நீதிமன்றம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி லியாகத் அலி, கூடுதல் மாவட்ட நீதிபதி பாரி, மகளிர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி காயத்ரி, முதன்மை நீதித்துறை நடுவர் சரண், சார்பு நீதிபதிகள் பிலிப்ஸ் நிக்கோலஸ், அலெக்ஸ், கதிரவன் மற்றும் சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரத்னவேல் பாண்டியன், நீதித்துறை நடுவர் ஆனந்தி சந்திரஹாச பூபதி, கல்யாண மாரிமுத்து, சந்தனகுமார், வழக்கறிஞர் சங்க தலைவர் கதிரேசன், செயலாளர் திருமலையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மாரியப்பன் செய்திருந்தார்.

Next Story