அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்ய ஏற்பாடு


அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியை தாங்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே கடந்த 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழி வகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் செல்ல முடியாமல் நேரடியாக இத்துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி உள்ளதால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தற்போது 2019-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் கடந்த 10-ந்தேதி வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 24-ந்தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை செய்து கொள்ளலாம். மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story