பழனி அருகே, கொத்தனார் குத்திக்கொலை - உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


பழனி அருகே, கொத்தனார் குத்திக்கொலை - உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கத்தியால் குத்தி கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சிலம்பரசன் (வயது 25). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 4 பேருடன், பாலசமுத்திரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாருக்கு மது அருந்த சென்றார்.

அப்போது சிலம்பரசனுக்கும், அங்கு மது அருந்தி கொண்டிருந்த மர்மநபர்கள் சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை பார் ஊழியர்கள் வெளியே அனுப்பினர். பின்னர் வெளியே வந்த பின்னரும் சிலம்பரசனுக்கும், மர்மநபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் சிலம்பரசனையும், அவருடைய நண்பர்களையும் தாக்க முயன்றனர். இதனால் சிலம்பரசனின் நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது மர்மநபர்கள் சிலம்பரசனை கத்தியால் குத்தினர். மேலும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதனால் அவர் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். இதற்கிடையே தகவல் அறிந்ததும் சிலம்பரசனின் உறவினர்கள் மதுபான பாருக்கு வந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சிலம்பரசனின் உறவினர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் சிவகிரிப்பட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பழனி-திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரத்தை சேர்ந்த மந்தி என்ற சக்திவேலை (24) போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் சிவகிரிப்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பழனி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story