கோர்ட்டு வழக்கையும் சந்திக்க வேண்டும்: மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கோர்ட்டு வழக்கையும் சந்திக்க வேண்டும்: மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 July 2019 3:45 AM IST (Updated: 17 July 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கோர்ட்டு வழக்கையும் சந்திக்க வேண்டும் என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிறிய பிரச்சினைகளுக்கும் சாலை மறியல் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களை அதிக அளவில் பாதிக்கும் இதுபோன்ற சமயங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்வதோடு விட்டு விடுவார்கள். இதனால் மறியலில் ஈடுபடுபவர்களுக்கு குற்றத்தின் தன்மையே தெரியாமல் போய்விடுகிறது. இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்து வழக்கினை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11 சாலை மறியல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை, பஜார் காவல் நிலையங்கள், உச்சிப்புளி, பரமக்குடி நகர், பார்த்திபனூர், பெருநாழி, பாம்பன் ஆகிய போலீஸ் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 70 பெயர் தெரிந்த நபர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் மீது அந்தந்த பகுதி கோர்ட்டுகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் இந்த குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதன்மூலம் கோர்ட்டில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். வழக்கு முடியும் வரை கோர்ட்டு விசாரணைக்கு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் வந்து செல்ல வேண்டும். வரும்காலங்களில் இந்த நடைமுறை தீவிரப்படுத்தப்படும். மாவட்டத்தில் சாலை மறியல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story