கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் தகவல்


கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கொப்பரை தேங்காய்களின் விலை குறைந்து உள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 50,000 டன் கொப்பரை தேங்காய்கள் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலம் 28 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 25 டன் அளவிலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை முனையத்தின் மூலம் 43 இடங்களில் 25,000 டன் அளவிலும் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 1,500 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசால் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.99.20 மற்றும் அரவை கொப்பரைக்கு கிலோ ரூ.95.21 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி அடுத்த 6 மாதங்களுக்கு நடைபெறும். 5,000 டன் பந்து கொப்பரையும், 45,000 டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். பெயர்களை பதிவு செய்யும் போது சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Next Story