புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 750 லிட்டர் சாராயம் பறிமுதல் - டிரைவர் கைது
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 750 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் ஆட்டோவை பின்னால் துரத்தி சென்று மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகே மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (வயது 25) என்பது தெரியவந்தது. பின்னர் ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் இருக்கைக்கு அடியிலும் பின்புறமும் சாக்கு மூட்டைகள் இருந்தன. அதில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது சாராய பாக் கெட்டுகள் இருந்தது. மொத்தம் 16 முட்டைகளில் 750 லிட்டர் சாராயம் இருந்தது.
இதுகுறித்து டிரைவர் மணிகண்டனிடம் விசாரணை செய்தபோது புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து கடலூர் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்ல இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். சாராய மூட்டைகளுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story