செஞ்சி அருகே, போலி டாக்டர்கள் 2 பேர் கைது


செஞ்சி அருகே, போலி டாக்டர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 3:45 AM IST (Updated: 17 July 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள சூரப்பட்டு கிராமத்தில் மெடிக்கல் நடத்தி வருபவர்களில் 2 பேர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ஊசி போட்டுவருவதாக விழுப்புரம் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் சுகந்திக்கு புகார் வந்தது. இதையடுத்து இணை இயக்குனர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் சூரப்பட்டு கிராமத்திற்கு நேற்று நேரில் சென்று அங்குள்ள மெடிக்கல்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு மெடிக்கலில், கோழிப்பண்ணை கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரின் மனைவி டெல்பினா (வயது 39) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு, கிளினிக் வைத்து நடத்தி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதேபோல் வீரமூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சிவனேசன் என்பவர் பி.பார்ம் படித்துவிட்டு, அங்கு மெடிக்கல் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த டெல்பினா, சிவனேசன் ஆகியோர் மீது இணை இயக்குனர் சுகந்தி கெடார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story