குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் - மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேட்டு மக்கள் தினந்தோறும் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் மிதமான அளவில் மழைபெய்தும், குடிநீர் பிரச்சினை என்பது இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஏனெனில், நேற்றும் மாவட்டத்தில் சில இடங்களில் குடிநீருக்கான போராட்டம் நீடித்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடும் வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. சிலர் வீடுகளில் மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதால், வருகிற குடிநீரும் அனைவருக்கும் முழுமையாக கிடைப்பதில்லை.
இவர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் நகராட்சி சார்பில் கடந்த சில வாரமாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் பிரச்சினை சீராகும் வரை வாரத்திற்கு 3 நாட்கள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக இப்பகுதி மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியடைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை 9.30 மணியளவில் அங்குள்ள மெயின் ரோட்டுக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக வாகன போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
அதன் பிறகு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது நகராட்சி அதிகாரிகளிடம் பேசி டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
திண்டிவனம் அருகே உள்ளது தென் நெற்குணம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அதிக நாட்களுக்கு வைத்திருப்பதால், தண்ணீர் கெட்டுப்போய் விடுகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். அந்த பகுதியில் தற்போது நிலவும் வறட்சியால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் மெயின் ரோட்டில் திரண்டனர். அங்கு அவர்கள் தென்நெற்குணம் கிராமத்தில் இருந்து திண்டிவனத்திற்கு புறப்பட்ட அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்த மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் அன்பு மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக பணி மேற்பார்வையாளர் அன்பு தெரிவித்ததன் பேரில், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி 5-வது வார்டு வாய்க்கால் மேட்டுத்தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் பொதுக்குழாய் மூலம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து, அப்பகுதி பெண்கள் நேற்று காலை காலி குடங்களுடன் காந்திரோட்டில் கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், நகராட்சி அதிகாரியிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட பெண்கள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story