கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சீட் கிடைக்காததால், வெடிகுண்டுடன் கும்பல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் - விருத்தாசலம் போலீசார் விசாரணை
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சீட் கிடைக்காததால், வெடிகுண்டுடன் கும்பல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய வாலிபரிடம் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் முன்பதிவு இல்லாத பெட்டியில் திருச்சி முசிறியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரேமானந்த்(வயது 28) என்பவர் ஏறினார். ஆனால் அவருக்கு ரெயிலில் உட்காருவதற்கு சீட் கிடைக்கவில்லை. நின்று கொண்டே பயணித்த பிரேமானந்த், விரக்தியடைந்து, விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இறங்கினார்.
பின்னர் அங்கிருந்த விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையம் நோக்கி பிரேமானந்த் ஓடினார். பின்னர் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், நவீன்குமார் மற்றும் போலீசாரிடம், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் முன்பதிவில்லாத பெட்டியில் வடமாநில கும்பல் வெடிகுண்டுகளுடன் பயணிப்பதாக கூறினார்.
இதனால் பதற்றமடைந்த போலீசார், விழுப்புரம் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறிது நேரத்தில் விழுப்புரத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட அந்த பெட்டியில் ஏறி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அந்த பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த யாரும் பயணிக்கவில்லை.
இது தொடர்பாக விழுப்புரம் ரெயில்வே போலீசார், விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரேமானந்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தனக்கு ரெயிலில் சீட் கிடைக்காததால் பொய்யான தகவலை கூறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story