குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - ரூ.24 ஆயிரம் பறிமுதல்
குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்னூர்,
குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து பாலகிளவா செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நிலப் பத்திரம், உயில் பத்திரம் போன்ற பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இங்கு இடைத்தரகர்கள் அதிகமாக நடமாடுவதாகவும், பத்திர பதிவு உள்ளிட்ட வேலைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தனர். சோதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடந்தது.
இதில் சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.24 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக சார் பதிவாளர் அலுவலக அலுவலர் அகமதுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர் லஞ்சம் பெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story