பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் பகுதியில் - மின்னல் தாக்கி 8 பசுக்கள் பலி
பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் பகுதியில் மின்னல் தாக்கி 8 பசுக்கள் பலியாகின.
சேத்துப்பட்டு,
பெரணமல்லூர் அரியபாடி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. இவர் தனது நிலத்தில் 4 பசுமாடுகளை கட்டி இருந்தார். இந்த நிலையில் அரியபாடி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 4 பசுமாடுகளும் இறந்து விட்டன. மறுநாள் வையாபுரி மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தபோது பசுமாடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தண்டராம்பட்டு ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. அதே பகுதியை சேர்ந்தவர் கொந்து நாட்டான். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பசு மாடுகளை அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்திருந்தனர். இரவு அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 பசுக்கள் அதே இடத்தில் இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் ஆகியோர் இறந்து கிடந்த பசு மாடுகளை பார்வையிட்டனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போளூர் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழை அளவு 84.4 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மழையின்போது மின்னல் தாக்கியதில் எடப்பிறை கிராமத்தை சேர்ந்த விவசாயி ரங்கதுரையின் 2 பசு மாடுகள் பலியாயின. கடந்த 12-ந் தேதியும் போளூரில் பரவலாக மழை பெய்தது. 2 நாட்கள் பெய்த மழையினால் போளூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் 3 இடங்களில் மின்னல் தாக்கி 8 பசுக்கள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story